ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ள சஞ்சீவி மலை, பல்வேறு புராணக் கதைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சஞ்சீவி மலையில் அமைந்துள்ள பாறை ஓவியங்கள் குறித்து இயற்கை ஆர்வலர்களான வெங்கடேஷ், பிரகாஷ்குமார் ஆகியோர் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான முனைவர் போ.கந்தசாமி தலைமையில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது, 'ராஜபாளையம் நகரின் பிரதானமாக அமைந்துள்ள சஞ்சீவி மலை, பல மூலிகைகள் நிறைந்த பகுதியாக, புராண காலத்தோடு இணைத்து பெருமையுடன் கூறப்பட்டு வருகிறது. மலை உச்சியில் சஞ்சீவிநாதர் மற்றும் முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
ஆரம்ப காலத்தில் மழை பெய்ய ஊர் மக்கள் ஒன்று கூடி சஞ்சீவி மலைக்குச் சென்று கடவுளைக் வேண்டிக்கொண்டு மேளதாளத்துடன் ஆரவாரமாய் பூஜை செய்து ஒரு கல்லை கீழே உருட்டி விடுவார்கள். பலமுறை அன்று இரவே மழை பெய்ததாகவும் கதைகள் கூறுகின்றன.
சஞ்சீவி மலையில் தேன் தட்டுப்பாறையின் அடிவாரத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் வெண்சாந்து கொண்டு வரையப்பட்டுள்ளன. பாறை ஓவியத்தில் ஆயுதங்களோடு மனிதன் நிற்பது போன்றும், காட்டெருமை மீது ஒரு மனிதன் அமர்ந்திருப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மூன்று பேருக்கு மேல் குழுவாக நடனமாடுவது போன்றும் வரையப்பட்டுள்ளது.
மேடையின் மீது அமர்ந்த ஒருவருக்கு நீண்ட உயரமான குடை போன்ற அமைப்புடன் வரையப்பட்டுள்ளது. படங்கள் தெளிவில்லாமல் முழுமை அடையாததால் ஆரம்ப காலத்தில் வரையப்பட்டதாகத் தெரிகிறது. விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள் கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன.
இந்த பாறை ஓவியங்களில் விலங்குகள் அதிகமாக வரையப்பட்டுள்ளது. அத்துடன் மனிதனின் சண்டை காட்சிகள் குறைவாக வரையப்பட்டுள்ளன. விலங்குகள் அதிகமாக வரையப்பட்டுள்ளதால் இவை தொடக்க காலத்தை குறிப்பதாக இருக்கிறது. மனிதனின் சண்டைக் காட்சிகள் அடுத்தடுத்த காலகட்டங்களில் வரையப்பட்டிருக்க வேண்டும். பல காலகட்டங்களாக இப்பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவற்றில் முக்கோண அமைப்புகள், குறியீடுகள் மற்றும் பல சின்னங்கள் காணப்படுகின்றன. இவற்றிலுள்ள குறியீட்டு உருவங்களை முழுமையாக கணிக்க இயலவில்லை. நீண்ட நெடிய பாறை முழுவதும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பல இடங்களில் அழிந்து காணப்படுகிறது. எனவே இந்த வெண்சாந்து பாறை ஓவிய அமைப்பை உற்றுநோக்கும்போது காலத்தால் சற்று முற்பட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் பல இடங்களில் வெண்சாந்து ஓவியங்கள் பெருங்கற்காலத்தில் வரையப்பட்டுள்ளன. எனவே இப்பாறை ஓவியங்கள் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது.
ஆரம்ப காலகட்டங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் வரைந்து அதற்கு மேல் வெண்சாந்து ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இப்பாறை ஓவியங்கள் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன் ஓவிய எழுத்துக்களாக வரையப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல இடங்களில் அமைந்துள்ள பாறை ஓவியங்கள் பெரும்பாலும் வழிபாட்டுத் தலங்களாக இருந்து வருகிறது. ஏனெனில் வரையப்பட்டுள்ள மனிதர்களை, மூதாதையர் வழிபாடாக மக்கள் இன்றளவும் பல்வேறு மலைகளில் வணங்கி வருகின்றனர்.
சஞ்சீவி மலை பாறை ஓவியங்கள் கற்கால பண்பாட்டோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது. முருகன் கோவில் அருகே உள்ள பாறையில் அலங்காரத்துடன் விஷ்ணுவின் முழு கோட்டுருவம் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே பாறை ஒன்றில் சூரிய வட்டம் ஒன்று பெண் உருவில் செதுக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலையில் அமைந்துள்ள இப்பாறை ஓவியத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து ஓவியத்தை பாதுகாக்க முன்வர வேண்டும். பரந்துபட்ட இம்மலையில் மேலும் பல தொல்லியல் தடயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது' என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
மத்திய அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் 6% அகவிலைப்படி (DA) உயர்வை பெறக்கூடும் என்று தகவ...
-
TNPSC Exam - Group 2,4 Full Books | Aatchi Tamil - Tamil Medium PDF Download Here TNPSC Exam - Co Operative Audit - Asst Director | Study Ma...
-
ஏதோ ஓர் உடல்நலக் கோளாறு. மருத்துவரிடம் செல்கிறார் ஒருவர். அவருக்கு வயது 40-ஐத் தாண்டியிருந்தால், மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி... 'ச...
No comments:
Post a Comment