Showing posts with label GENERAL NEWS. Show all posts
Showing posts with label GENERAL NEWS. Show all posts

Saturday, May 27, 2023

தகவல் தொழில்நுட்ப ம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் திறன் மிக்கவர்களுக்கு ரஷ்யாவில் அதிக வேலைவாய்ப்பு

இந்திய தொழில் வர்த்தக சபை (ஐசிசிஐ) கோவை கிளை தலைவர் ராமலு தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய ரஷ்யா நாட்டின் தென்னிந்தியாவுக்கான தலைமை தூதரக அதிகாரி ஒலெக் அவ்தீவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நட்புறவு சிறப்பாக உள்ளது. இருநாடுகள் இணைந்து தயாரித்துள்ள 'பிரமோஸ்' அதிவேக ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி உள்ளிட்ட பல வழி முறைகளில் ஏவப்படக்கூடிய தன்மை கொண்டது. பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேளாண், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

ரஷ்யாவில் அதிக திறமை வாய்ந்த வல்லுநர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள திறன்மிக்க மனிதவளம் முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்துறையில் அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதை கருத்தில் கொண்டு, இந்தியாவில் இருந்து ரஷ்ய நாட்டுக்கு பணியாற்ற செல்ல விரும்பும் பல்துறை வல்லுநர்களுக்கு விசா வழங்குவதில் தொடங்கி தேவையான உதவிகள் தூதரகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள், எல்பிஜி, பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக வாய்ப்பு சிறப்பாக உள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்த கமிஷனின் பரிந்துரைப்படி ரஷ்யா 500 பொருட்களை இந்தியாவிடம் இருந்து வாங்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையினர் சரியான முறையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, தொழில்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்திய தொழில் வர்த்தக சபை கோவை துணைத் தலைவர் சுந்தரம், செயலாளர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.

Tuesday, October 4, 2022

கோழி, செம்மறி ஆடு வளர்ப்பில் ஆர்வம் கொண்டவரா? ரூ.50 லட்சம் வரை மானியம் அறிவிப்பு

கால்நடைத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் தொழில்முனைவோர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கமானது, புறக்கடை கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டினத்தை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதலாகும்.

கால்நடைகள் சார்ந்த தொழில் மேற்கொள்ள முனைவோர் இத்திட்டத்தில் பங்கேற்று கால்நடை பெருக்கத்தில் பங்கு பெற்று பயன் பெறுமாறு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; இத்திட்டத்தின் கீழ் கோழி வளர்க்க முனைவோர் 1000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து நான்கு வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு 500 பெண் ஆடுகள் + 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண் பன்றிகள் + 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகப்பிற்காக ஓராண்டில் 2000-2400 மெட்ரிக் டன் வைக்கோல் / ஊறுகாய் புல் /ஒரு நாளில் 30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம் / தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள முனைவோர்க்கு தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

யார் பயன்பெறலாம்?

இத்திட்டத்தின் கீழ் தனி நபர், சுய உதவி குழுக்கள்(SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு(FPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் (JLG), பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர்கள் ஆவர். முனைவோர் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும்.

தொழில்முனைவோர்/தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும், திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தினையும் பெற வேண்டும்.

பயன் பெற விரும்புவோர் https://nim.udyamimitra.in/ என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் இத்திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்தும் நிறுவனமான தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு திட்ட வழிகாட்டுதலின் படி உள்ளவற்றை கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும். பின்னர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற அனுப்பப்படும். பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானியம் இரு தவணைகளில் வழங்கப்படும்.

திட்டம் தொடர்பான முழுமையான தகவல்கள் கீழ் இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

nlm.udyamimitra

Tamil Nadu Livestock Development Agency (TNLDA)

OPERATION GUIDELINES

மேலும் விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள்,பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் சென்னை, தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

உங்கள் ஏடிஎம் PIN நம்பர் இதுவா:? உடனடியாக மாற்றி விடுங்கள்!!

படித்தவர்கள் படிக்காதவர்கள் போன்ற பலரிடமும் ஏடிஎம் கார்டுகள் தற்போது உள்ளன.ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் பல பேர் ஏடிஎம் பின் நம்பர் மறந்துவிடக்கூடாது என்பதற்காக பிறந்த நாள் வண்டி நம்பர் அல்லது வருடம் இதுபோன்று மூன்றாவது நபர்கள் எளிதில் வியூகிக்கக்கூடிய pin நம்பர்களையே வைத்திருக்கின்றோம்.

வங்கிகள் சார்பில் கூட இது போன்ற பிறர் எளிமையாக கண்டுபிடிக்க கூடிய பாஸ்வேர்டை வைக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
இருப்பினும் பலர் இதுபோன்ற எளிதான பாஸ்வேர்டுகளை வைத்திருக்கின்றன.

அவ்வாறு எளிதாக ஏடிஎம் கடவுச்சொல் வைத்திருப்பவர்களுக்கான ஓர் உதாரண செய்தி தான் இது.திருவண்ணாமலையைச் சேர்ந்த ரேவதி என்னும் பெண் ஒருவர் விடுமுறைக்காக சென்னை வந்துள்ளார்.அங்கு அவரது கைப்பையை தொலைத்துள்ளார்.அந்தப் பையனுள் இருந்த ஆதார் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டுகளை கைப்பற்றிய கொள்ளையர்கள்,ஆதார் கார்டில் இருந்த அந்தப் பெண்ணின் பிறந்த தேதியை ஏடிஎம் பாஸ்வேர்டாக போட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணின் ஏடிஎம் பாஸ்வேர்ட் அவரின் பிறந்த தேதியாக இருந்ததனால் அந்த கொள்ளையர்கள் அவரின் அக்கவுண்டில் இருந்து 50 ஆயிரம் பணத்தினை திருடிச் சென்றுள்ளனர்.இது தொடர்பாக அப்பெண் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.அந்த ஏடிஎம் கார்டையும் வங்கி தரப்பில் முடக்கப்பட்டுள்ளது.

வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகள் அமல்

வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், 'சர்வர் அப்டேட்' பணிகளால் ஏராளமான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன.வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு, சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில், புதிய நடைமுறையை ஏற்படுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அரசு, வாரிசு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக புதிய அரசாணை(எண்:478) வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுவரை, இறந்தவரின் பெற்றோர், மனைவி அல்லது கணவர், மகன், மகள் (மகன் இறந்திருந்தால், மருமகள் மற்றும் பேரன், பேத்தி) வாரிசுகளாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.இனி, கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் மட்டுமே வாரிசாக அறிவிக்கப்படுவர். சான்றிதழில், உயிருடன் இருக்கின்றனரா அல்லது இறந்துவிட்டனரா என்று மட்டும் தெளிவாக குறிப்பிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகன் அல்லது மகள் இறந்திருந்தால், அவரது வாரிசுதாரர் தனியே வாரிசு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.திருமணம் ஆகாதவர் இறந்தால், தந்தை, தாய், சகோதரர், சகோதரிகள் வாரிசுகளாக அறிவிக்கப்படுவர். ஒருவர், ஏழு ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போயிருந்தால், கோர்ட்டில் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக 'சர்வர் அப்டேட்' பணிகள் நடப்பதால், விண்ணப்பங்கள் தேக்கம் அடைந்துள்ளன. 

விரைவில், சீரமைக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும்.வாரிசுகள், 18 வயதுக்கு குறைவாக இருந்தால், அவர்களின் பாதுகாவலர் அல்லது இறந்தவரின் சகோதரர் அல்லது சகோதரிகள் விண்ணப்பிக்கலாம். தாசில்தார் வழங்கிய வாரிசு சான்று தொடர்பாக, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதன்பின், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மகளிர் இலவச டிக்கெட்டுக்கு இனி காசு வாங்கலாம்.. - போக்குவரத்து துறை.!

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை நடத்துனர்கள் மற்றும் பிற ஆண் பயணிகள் இழிவாக நடத்துவது அன்றாடம் தொடர்ந்து வரும் ஒரு விஷயம்தான்.

சமீபத்தில் அமைச்சர் பொன்முடி ஓசியில் தானே பயணிக்கிறீர் என்று ஒரு பெண் பயணியை பார்த்து கேட்டது வீடியோவாக பரவி சச்சையானது. இதனை தொடர்ந்து தற்போது இலவசத்தில் பயணிக்க மாட்டேன் என்று பெண்கள் சபதம் எடுத்து பேருந்துகளில் கட்டணம் கொடுத்து பயணச்சீட்டு பெறுகிறார்கள்.


இந்த விஷயம் ஆளும் கட்சிக்கு எதிராக கிளம்பிய நிலையில், என்னசெய்வது என்று தெரியாமல் அரசு விழிபிதுங்கி நின்றது.

இந்த நிலையில், தற்போது அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டை பணம் கொடுத்து தான் பயணம் செய்தேன் என்று ஏதாவது பெண்கள் விருப்பப்பட்டால் அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடுங்கள் என்று போக்குவரத்து துறை அனைத்து நடத்துனர்களுக்கும் வாய்மொழியாக அறிவுறுத்தி உள்ளது

ரேஷன் விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆளெடுப்பு; அக். 13 முதல் விண்ணப்பிக்கலாம்!

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு அக். 13ம் தேதி முதல் நவ. 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை, அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் குழு உறுப்பினர்கள், கூட்டுறவு கடைகளின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தேர்வு தொடர்புடைய விதிகளில் சில திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு வருவாய்க் கோட்டாட்சியர், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கான விற்பனையாளர், கட்டுநர் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

வெவ்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு காலவரையறை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆள்சேர்ப்பு நிலையத்தில் தங்களால் நியமனம் செய்யப்பட வேண்டிய ஒரு வருவாய்க் கோட்டாட்சியரை தாங்களே உடனடியாக நியமனம் செய்து ஆணை வழங்க வேண்டும். அந்த ஆணையின் நகலினை தங்களுடைய மாவட்டத்திற்கு தொடர்புடைய கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

குழு உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ள மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலருக்கு கூர்நோக்குடைய மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்ற தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்.

கொரோனா தொற்றுக்குப் பின்னராக இந்த தெரிவு நடவடிக்கைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக்கூடும் என்பதால் தெரிவு நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்த வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாளில் மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட கண்காணிப்பாளருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

இதையடுத்து, இப்பணிக்கு அக். 13ம் தேதி முதல் நவ. 14ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அதன்பிறகு, நேர்முகத்தேர்வு டிச. 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி, தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மாவட்ட ஆட்சியர், இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"ஓசி" பஸ் டிராமாவுக்கு "ஃபுல்ஸ்டாப்".. இலவசம் பிடிக்கலயா? "பணம்" வாங்குங்க -நடத்துனர்களுக்கு அட்வைஸ்

இலவச பேருந்தில் கட்டணம் செலுத்தி பயணிக்க விரும்பும் பெண்களிடம் பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நடத்துனர்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

அதில், "உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்." என்றார்.

ஓசி டிக்கெட் வேண்டாம்

இதனிடையே கடந்த சில நாட்கள் முன்பாக கோவை அரசு பேருந்து ஒன்றில் நடத்துனரிடம் மூதாட்டி ஒருவர் கட்டணம் கொடுத்து டிக்கெட் கேட்டார். அதற்கு நடத்துனரோ , இது இலவச பேருந்துதான் கட்டணம் வேண்டாம் என்று கூற, "தமிழ்நாடே ஓசியில போகட்டும், நான் ஓசியில் போக மாட்டேன். எனக்கு கட்டணம் பெற்று டிக்கெட் கொடுங்கள் என்று கூறியது பரபரப்பை கிளப்பியது.

டிராமா

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்ட நிலையில், திமுக செய்தித்தொடர்பாளர் ராஜீவ் காந்தி "கோவை அதிமுக IT WING -ஐ சார்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தன் பக்கத்து வீட்டு துளசியம்மாள் என்கிற அதிமுகவை சேர்ந்த மூதாட்டியை அழைத்து கொண்டு போய் TN 38 N 2841 எண் பேருந்தில் நடத்துனருடன் நான் ஓசியில் போக மாட்டேன் என பிரச்சனை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பி இருக்கிறார்!" என்று பதிவிட்டார்,

வழக்குப்பதிவு

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்த வீடியோவை வெளியிட்டது அதிமுகவை சேர்ந்த பிருத்விராஜ்தான் என்பது உறுதியானது. இதனை அடுத்து மதுக்கரை போலீசார் பிருத்விராஜ் உள்ளிட்ட 3 பேர் மீது அவதூறு பதிவு செய்தது. இதற்கு அதிமுகவின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

வாய்மொழி அறிவுறுத்தல்

இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுபோன்றவற்றை தடுக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவை நடத்துனர்களுக்கு வழங்கி இருக்கிறது. அதன்படி, இலவச பேருந்து பயணத்தை விரும்பாத பெண்களிடம் கட்டணம் பெற்று டிக்கெட் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பெருகிவரும் கோச்சிங் சென்டர்கள்: தமிழக அரசு முறைப்படுத்த கோரிக்கை

தமிழகத்தில் அரசு பணிகள் பெரும்பாலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், காவலர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ படிப்பிற்கு நீட் போன்றவை மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலமே தேர்வு செய்யப்படுகிறது.

இத்தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் கோச்சிங் சென்டர்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பல தகுதியானவையாக இல்லையென்றும், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை மூளை சலவை செய்து லட்சக்கணக்கான ரூபாய்களை பிடுங்கி விடுவதாகவும், தற்போது புகார்கள் வருகின்றன. இம்மையங்களை ஒழுங்குபடுத்த வேண்டுமென தற்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், பெற்றோர்களின் ஆசை, அறியாமைகளை பயன்படுத்தி கோச்சிங் சென்டர்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் பறிக்கப்படுகிறது. குறிப்பாக நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கை அளவிட முடியாத அளவிற்கு தோன்றி உள்ளது. தவிர போலீஸ் தேர்வுகள், டெட் தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் போன்ற பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வந்தவுடன் முதலில் இலவசம் என துவங்கி, பின், படிப்படியாக பணம் பிடுங்கப்படுகிறது.

இங்கு முறையாக பாடம் நடத்தப்படுகிறதா?, தகுதியான பயிற்றுநர்கள் உள்ளனரா? என்பதை அரசு கவனிக்க வேண்டும். தமிழகத்தில் புற்றீசல்கள் பெருகி வரும் கோச்சிங் சென்டர்களை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, October 3, 2022

சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் எப்போது? விரிவான வழிபாட்டு விளக்கங்கள்!

நாளை சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் 9-ம் நாளான இந்தப் புண்ணிய தினத்தில் அம்பாளை எப்படி வழிபட வேண்டும், இன்று சரஸ்வதி தேவிக்கு என்ன சிறப்பு, சரஸ்வதி பூஜை செய்வது எப்படி, பூஜையில் ஏடு அடுக்கும் - பிரிக்கும் நேரம் என்னென்ன, சரஸ்வதி பூஜா பலன்கள் குறித்து புராணங்கள் என்ன சொல்கின்றன...
விரிவாகத் தெரிந்துகொள்வோமா?

பவிஷ்ய புராணம் சொல்லும் ரகசியம்!

`அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பார் ஒளவை. தைத்திரீய உபநிஷதமும் 'மாதாவை தெய்வமாகக் கொள்வாயாக; பிதாவை தெய்வ மாகக் கொள்வாயாக' என்றே அறிவுறுத்தும். இங்கேயும் முதலில் அம்மாதான்.

இப்படித் தாயாரை தெய்வமாக நினைக்க முடியுமானால் தெய்வத்தைத் தாயாராக நினைக்கமுடியும் அல்லவா? அங்ஙனம் ஆதிசக்தியை நம் அம்மாவாகக் கருதி வழிபடும் நாள்களே நவராத்திரி தினங்கள். இந்த ஒன்பது தினங்களும் அம்பிகையைப் பக்தியோடு வழிபடும் அன்பர்களுக்குத் தேவர்களுக்குக் கிட்டாத இன்பமும், செல்வபோகமும், பிணி இல்லாத வாழ்க்கையும் வரமாகக் கிடைக்கும்.
சரஸ்வதி அம்மன்

9 நாள்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி மூன்று நாள்களில் வழிபட வேண்டும். அதுவும் இயலாதவர்கள் நவமி தினத்தில் மட்டும் அம்பாளை வழிபட்டு பலன் அடையலாம். இதனால் துன்பமே இல்லாத வாழ்க்கை அமையும் என்கிறது பவிஷ்ய புராணம்.

நவமித் திருநாளில் என்ன செய்ய வேண்டும்?

நவராத்திரியில் 9-ம் நாளான நவமி அன்று சும்ப- நிசும்பர்களை வதம் செய்யத் தோன்றிய காமேஸ்வரி எனும் சிவசக்தி கோலத்தில் அம்பாளை வழிபடுவார்கள். இந்தத் தினத்தில் 10 வயதுள்ள பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டுமாம். இதன் மூலம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இந்தத் தினத்தில் அம்பாள் திருவுருவப் படத்துக்கு அடுக்கு மல்லி, நந்தியாவட்டை மலர்களைச் சமர்ப்பித்து வழிபடலாம். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம்.

மட்டுமன்றி ஒன்பதாம் நாளான இந்த நவமி தினத்தையே சரஸ்வதி பூஜையாகவும் கொண்டாடுகிறோம்.
சரஸ்வதி தேவி

சரஸ்வதி பூஜை ஏன், வழிபடுவது எப்படி?

ஆதிசக்தியின் அம்சம் மகா சரஸ்வதியாகத் தோன்றி அருள்பாலித்த புண்ணிய தினம் என்பதால், நவராத்திரி நவமி (மூல நட்சத்திரம் இணைந்த) நாள் கலைவாணிக்கு உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.

இந்த நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜையறையைக் கழுவிக் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். உரிய சுபவேளையில் சரஸ்வதி தேவியை புத்தகம், படம், விக்ரகம் அல்லது கலசத்தில் ஆவாஹனம் செய்யலாம்.

பிள்ளைகளின் பாடப்புத்தகங்களை அடுக்கி, பட்டாடை போர்த்தி அதன்மீது கலைவாணியின் விக்கிரகம், படம், கலசம் வைத்து வழிபடலாம். முறைப்படி பிரார்த்தனை சங்கல்பம் செய்து வணங்குதல் வேண்டும்.

படமோ, விக்கிரஹமோ, கலச ஸ்தாபிதமோ மலர்களால் அலங்கரித்து, சந்தனக் குங்குமத் திலகம் இட்டு அலங்கரிக்க வேண்டும். கனி வகை களையும், சுண்டல், பொங்கல் பிரசாதங்களையும் நைவேத்தியமாகச் சமர்ப்பிக்கலாம்.

சரஸ்வதி தேவி மகிமைகள்

நங்காய் நங்காய் நமோஸ்து

ஞானக் கொழுந்தே நமோஸ்து

கல்விக்கரசி நமோஸ்து!

கணக்கறி தேவி நமோஸ்து!

சொல்லும் பொருளே நமோஸ்து!

சூட்சுமரூபி நமோஸ்து!

- என்று போற்றித் துதி செய்து மலர்களால் அர்ச்சித்தும், சரஸ்வதி கலம்பகம் முதலான துதிப்பாடல்களைப் பாடியும் குடும்பத்துடன் சேர்ந்து வணங்கவேண்டும். பின்னர் தூப-தீப ஆராதனைகள் செய்து வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட் களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல் அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.
சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை உகந்த நேரம்நாளை (புரட்டாசி - 17) 4.10.22 செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் 9 மணி வரையிலும் சுக்ர ஓரை காலம் உகந்தது.மாலையில் பூஜிக்க வேண்டும் எனில், மாலை 7 முதல் 8 மணிக்குள் குரு ஓரையில் ஏடு அடுக்கி வழிபடலாம்.

விஜயதசமி பூஜை:

5.10.22 அன்று (புரட்டாசி -18) புதன் கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் பூஜை செய்து ஏடு பிரிக்கலாம். புதன் கிழமை தசமித் திருநாளில் புரட்டாசி திருவோணமும் சேர்ந்து வருவதால் ஹயக்ரீவருக்கும் உகந்த நாள் இது. ஆகவே இந்த வருடம் தசமியில் விநாயகர், சரஸ்வதி தேவி, ஹயக்ரீவர் ஆகிய மூவரையும் வழிபட்டு அருள்பெறலாம்.

என்ன பலன் கிடைக்கும்?

வித்யாதி தேவதை, கலை மடந்தை, அறிவு தெய்வம் என்று சரஸ்வதிக்கு உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம். எல்லாவிதமான இகபர நலன்களும் வழங்கும் அம்பிகை விசேஷமாக வாக்குவன்மையும் அருள்கிறாள். ஏனெனில் அவளே அக்ஷர ரூபமானவள்.இன்று அந்த அன்னையை வழிபடுவதால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம். பிள்ளைகள் பிடித்தமான கல்வித் துறைகளில் பெரும் வெற்றியோடு ஜொலிக்க முடியும். மட்டுமன்றி தனம், தானியம், நிலை யான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சுவர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக் கூடிய வழிபாடு இது!

''அப்போ கவர்மெண்ட் ஸ்கூல் சுகாதாரமா, நீட்டாவே இருக்கக் கூடாதா?''-கிராம சபை கூட்டத்தில் கண்ணீர் விட்ட தலைமை ஆசிரியை

கிராம சபை கூட்டத்தில் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு அடிப்படை வசதிகளே இல்லை என கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை அடுத்துள்ளது சாலமரத்துப்பட்டி ஊராட்சி. அங்குள்ள ஓலைப்பட்டி எனும் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஓலைப்பட்டி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பெண் தலைமை ஆசிரியை, ''பள்ளியில் மீட்டர் பெட்டி போய்விட்டது. 

இரண்டு கட்டிடங்கள் இருக்கிறது ஒரு கட்டிடத்தில் தான் மீட்டர் பெட்டி உள்ளது. இன்னொரு கட்டிடத்தில் மீட்டர் பெட்டி இல்லை. அதனால் 50 மீட்டர் தூரத்திற்கு வயர் கனெக்ஷன் கொடுக்க வேண்டும். வயர் கனெக்ஷன் கொடுத்தாலும் ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு கூட தாங்குவது கிடையாது. குரங்கு பிச்சுப் போட்டுவிடுகிறது அல்லது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுகிறது. இது போன்று வயர் டேமேஜ் ஆனால் கட்டிடத்தில் எர்த் அடிக்கிறது. இதில் பசங்களுக்கு ஏதாவது ஆச்சு என்றால் யார் பதில் சொல்வார்கள். இது தொடர்பாக பிடிஓ ஆபிசுக்கு சென்று கடிதம் கொடுத்தேன். 

அதற்கு பிடிஓ சொன்னார் 'இதற்கு 25,000 ரூபாய் செலவாகும். இதெல்லாம் செய்ய முடியாதம்மா. நீங்க எடுத்துட்டு போயிட்டு நீங்கள் ஏதாவது வருமானம் வந்துச்சுன்னா பார்த்து செஞ்சுக்கோங்க' என்று. நாங்கள் என்ன கமிஷனா வாங்குறோம். அதிகாரிகளிடம் முறையிட்டால் கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்க சொல்கிறார்கள். ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

சேதமடைந்த பள்ளி காம்பவுண்ட்டை ஜேசிபி வைத்து இடிக்க முடியாது மேனுவலாகதான் இடிக்க முடியும் என சொன்னார்கள். அந்த இடம் புல், புதர்கள், முள்ளு செடிகளாக இருக்கிறது. பாம்பு அந்த வழியாக ஜன்னலில் ஏறி வருகிறது. நான் என்ன செய்வது. எங்களுக்கு நல்ல காம்பவுண்ட் கட்டி தர வேண்டும் என்று கடிதம் கொடுத்தேன். அதுவும் நடக்கவில்லை. 

நான் வந்த உடனே பில்டிங் அழுக்காக இருக்கிறது, சுகாதாரமாக இல்லை என்பதற்காக ஐம்பதாயிரம் என் கை காசு செலவு செய்த செய்து பெயிண்டிங் செய்தேன். இப்பொழுது ஒரு பில்டிங்கிற்கு கமிஷனர் அம்மா பெயிண்ட் பண்ணி கொடுத்தாங்க. அதுவும் ஒரு கோட் தான் அடிப்போம் இரண்டு கோட் எலிஜிபிள் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போ கவர்மெண்ட் ஸ்கூல் சுகாதாரமாக இருக்கக் கூடாதா? நீட்டாவே இருக்கக் கூடாதா? சாபக்கேடா கவர்ன்மென்ட் ஸ்கூல் என்றால். பேசாமல் விஆர்எஸ் கொடுத்துட்டு போயிடலாம். ஒவ்வொருத்தர்கிட்டயும் கெஞ்சிகிட்டு இருப்பதை விட'' என்று கண்ணீர் விட்டார்.

'ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை நேரடியாக ஆசிரியராக அமர்த்த வேண்டும்'-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

'தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல், நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க அரசு முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 9 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் வாடி வருகின்றனர். இதற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. மாறாக கடந்த 9 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாத தமிழக அரசு தான் இதற்கு காரணம் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை அதனடிப்படையில் ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும்; போட்டித் தேர்வுகளை நடத்தக்கூடாது என்ற அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது; அதை தமிழக அரசு ஏற்க மறுப்பது நியாயமற்றது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தொடக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரையிலும், பின்னர் 10-ஆம் வகுப்பு வரையிலும் கல்வி வழங்க மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதற்காக மத்திய அரசு விதித்த நிபந்தனையின்படி 2012 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது தான் தகுதி ஆகும். 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அதே நிலையே இப்போதும் தொடர வேண்டும் என்பது தகுதித் தேர்வில் வென்றவர்களின் கோரிக்கை.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவதற்கு போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற விதி 2018&ஆம் ஆண்டு முந்தைய ஆட்சிக்காலத்தில் தான் திணிக்கப்பட்டது. 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வெயிட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து வெயிட்டேஜ் முறையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு மாற்றாகத் தான் 20.07.2018 -தேதியிட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை கொண்டு வந்தது.

அதாவது ஒருவர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால், அவர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர் ஆவார்; ஆனால், ஆசிரியர் பணி அவரது உரிமை இல்லை; அதற்கு அவர் போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பது தான் அரசாணை 149-இன் பொருள் ஆகும். 2018-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை இப்போது தான் முதன்முறையாக செயல்படுத்தப்படுகிறது. ஒரே பணிக்கு இரு தேர்வுகளை நடத்துவது அந்தத் தேர்வுகளையே சந்தேகிக்கும் செயலாகும். இது கூடவே கூடாது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை விட அதிக ஊதியம் வழங்கப்படும் பணி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி ஆகும். அதற்கு ஒரே ஒரு போட்டித் தேர்வு மட்டும் தான் நடத்தப்படுகிறது. அதை விட அதிக ஊதியம் வழங்கப்படும் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தால் எந்தத் தேர்வும் இல்லாமல் பணி வழங்கப்படுகிறது. ஆனால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதலில் தகுதித்தேர்வு, பின் போட்டித்தேர்வு என இரு தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? 2018-ஆம் ஆண்டில் அரசாணை 149 பிறப்பிக்கப்பட்ட போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். அவ்வாறு எதிர்க்கப்பட்ட அரசாணையை அவரது அரசு இப்போது செயல்படுத்துவது நியாயமற்றதாகும்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை போட்டித் தேர்வின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்ற அரசாணை தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். எனவே, அரசாணை எண் 149-ஐ செல்லாது என்று அறிவித்து விட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் நேரடியாக இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Sunday, October 2, 2022

ரூ.5 ரூபாய் நாணயம் போட்டால் 20 லிட்., சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூர் கிராமத்தில், மாநில நிதி குழு மானியத்தில், 2018 - 19ம் ஆண்டு, 7.96 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது.பின், கொரோனா காலத்தில் அதன் பயன்பாடு குறைந்து விட்டது.

சுத்திகரிப்பு இயந்திரமும் பழுதானதால் கிடப்பில் போடப்பட்டது.தற்போது பழுது நீக்கி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 5 ரூபாய் நாணயம் போட்டால், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள இந்த திட்டத்தில் கிராம மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். 5 ரூபாய் நாணயம் போட்டால் 20 லிட்டர் தண்ணீர் வரும், பின் தானாக நின்று விடும். தண்ணீரை யாரும் வீணாக்க முடியாது.

யார் வேண்டுமானாலும் தண்ணீரை பயன் படுத்தி கொள்ளலாம்.கிராமத்தில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சியின் போது அவர்கள் குடும்பத்திற்கு தேவையான குடிநீர் பிடித்து கொள்ளலாம்.அந்த முறை கிராம மக்கள் மட்டும் பயன்படுத்த முடியும். வெளி மக்கள் அவ்வாறு பிடித்து செல்ல அனுமதி கிடையாது.கடந்த ஆண்டு மழையின் போது குடிநீர் குழாய்கள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அப்போதுஇந்த தண்ணீர்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பராமரிக்க ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு ஊழியா்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்தை முறையாக வழங்க வேண்டும்

அரசு ஊழியா்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்தை அரசு முறையாக வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். அரசு ஊழியா்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்தை அரசு முறையாக வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: வறுமையால் கல்வியைத் தொடர முடியாமல் மகன் தற்கொலை செய்ததால் விரக்தி அடைந்து வீட்டைவிட்டு வெளியேறி பிச்சை எடுக்கும் ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரிக்கு சேர வேண்டிய ஓய்வூதிய தொகையை 6 வாரத்தில் வட்டியுடன் வழங்க உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை மனதார வரவேற்கிறேன். தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலத்தை சோந்த கோபால் வேளாண் உதவி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவா். கூட்டுறவு சங்கத்தில் கடன் நிலுவையில் இருந்ததால், அவருக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டதோடு அவரது மகன் தற்கொலை செய்து கொண்டாா்.

கோபாலின் 2 மகள்களுக்கும் 40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாமல் கூலி வேலைக்கு செல்கிறாா்கள். இதனால் விரக்தி அடைந்த அவா், வீட்டை விட்டு வெளியேறி கோயில்களில் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறாா். ஒரு அரசு அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன என்பது இங்கு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதனால், உண்மையாக உழைக்கும் அரசு அதிகாரிகளுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தமிழக அரசு சார்பில் தங்கும் வசதி, தரமான உணவுடன் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்- விண்ணப்பிப்பது எப்படி?

All India Civil Services Coaching Centre: 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது, இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வனத்துறை பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய பாதுகாப்புப் பணி உள்ளிட்ட மத்தியப் பணிகளுக்கு குடிமைப் பணி (Civil Service Examination) தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆள்சேர்க்கை தெரிவு முறையானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலையைக் கொண்டுள்ளது.

அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வு வரும் மே மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு சென்னையில் உள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், கோயம்பத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள மையங்களில் கட்டணமில்லா பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2023ம் ஆண்டு முதல்நிலை பயிற்சித் திட்டத்தை பயிற்சித் துறை தலைவர் அறிவித்துள்ளார். அதில், "சென்னை அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, உணவு, தரமான நூலகம். காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது.

இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும், 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தகா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன.

2023-ஆம் ஆண்டில் மத்தியக் தேர்வாணையக்குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 07.10.2022 முதல் 27.10.2022 வரை விண்ண ப்பிக்கலாம்.

இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும், விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது.

மேலும், பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தகுதியுடைய நபர்கள் 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்படும் மாணவ/மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். 2022, டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் 5 பெருங்கடல்கள் இருப்பது தெரியும்... ஆறாவது கடல் எங்கு இருக்கு தெரியுமா?

பூமியில் ஐந்து பெருங்கடல்கள் உள்ளன. அவை: அட்லாண்டிக், பசிபிக், இந்திய, ஆர்டிக் மற்றும் அண்டார்க்டிக் பெருங்கடல் என்று நாம் பள்ளியில் படித்திருப்போம்.

சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று பூமியில் ஆறாவதாக ஒரு கடலைக் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியின் மேற்பரப்புக்கு கீழே உருவான ஒரு அரிய வைரத்தின் பகுப்பாய்வின் போது இந்த ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மன்-இத்தாலிய-அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழுவின் ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பூமியின் உள் அமைப்பு மற்றும் இயக்கவியல் ஆகியவை மேன்டில் டிரான்சிஷன் மண்டலத்திற்கும் கீழ் மேலோட்டத்திற்கும் இடையிலான 660 கிமீ எல்லையால் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது.

இந்த இடத்தில அடர்த்தியான பாறைகள் அமைப்பு ஏதும் இல்லாததால் நீர் சேர்ந்து தங்குகிறது. இது கடல் நீர் அடுக்குகளுடன் சேர்ந்து, மாற்ற மண்டலத்திற்குள் நுழைகிறது என்ற கோட்பாட்டை உறுதிப்படுத்துகிறது. மேலும் இந்த புதிய கண்டுபிடிப்பு பூமியின் நீர் சுழற்சி பூமியின் உட்புறத்தையும் உள்ளடக்கியது என்பதை வெளிப்படுத்துகிறது

ஆறாவது பெருங்கடல் எங்கே?

பூமியின் மேல் மேன்டில் மற்றும் கீழ் மேன்டில் ஆகியவற்றை பிரிக்கும் எல்லை அடுக்கு, மாற்றம் மண்டலம் (ட்ரான்ஸிசன் சோன்-TZ) என்றழைக்கப்படுகிறது. இந்த அடுக்கில் தான் நீரை ஆதாரம் உள்ளதை கண்டறிந்துள்ளனர். இந்த மாற்ற மண்டலத்தின் எல்லை 410 முதல் 660 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.

அங்குள்ள 23,000 வரையிலான அபரிமிதமான அழுத்தம் காரணமாக ஆலிவ்-பச்சை நிற ஆலிவைன் கனிம அதன் படிக அமைப்பில் இருந்து மாறுபடுகிறது.

ஆலிவைன் பூமியின் மேல் மேன்டில் 70 சதவீதத்தை கொண்டுள்ளது. இது 'பெரிடோட்' என்றும் அழைக்கப்படுகிறது. மாற்றம் மண்டலத்தின் மேல் எல்லையில், சுமார் 410 கிலோமீட்டர் ஆழத்தில், அது அடர்த்தியான வாட்ஸ்லேயிட்டாக(wadsleyite) மாற்றப்படுகிறது. 520 கிலோமீட்டர் தொலைவில் அது இன்னும் அடர்த்தியான ரிங்வுடைட்டாக(ringwoodite) உருமாறுகிறது.

எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

விஞ்ஞானிகள் போட்ஸ்வானாவில் இருந்து ஒரு வைரத்தை பகுப்பாய்வு செய்தனர். இது கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 660 கிலோமீட்டர் கீழே மாற்றம் மண்டலம் மற்றும் கீழ் மேன்டில் இடையே உள்ள இடைமுகத்தில் உருவானது. ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் எஃப்டிஐஆர் ஸ்பெக்ட்ரோமெட்ரி ஆகியவற்றைப் பயன்படுத்தி வைரத்தின் பகுப்பாய்வு அதிக நீர் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் ரிங்வுடைட் சேர்த்தல்களை வெளிப்படுத்தியது.

1.5 சென்டிமீட்டர் வைரத்தில் உள்ள சேர்க்கைகள் துல்லியமான இரசாயன கலவையை தீர்மானிக்க அனுமதிக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தன. மாற்றம் மண்டலம் ஒரு உலர்ந்த கடற்பாசி அல்ல, ஆனால் கணிசமான அளவு தண்ணீரைக் கொண்டுள்ளது. "பூமிக்குள் ஒரு கடல் பற்றிய ஜூல்ஸ் வெர்னின் யோசனைக்கு" நம்மை நெருக்கமாகக் கொண்டு வரும் என்று குழு உறுதிப்படுத்தியது.

மாற்றம் மண்டலத்தின் உயர் நீர் உள்ளடக்கம் பூமியின் உள்ளே மாறும் சூழ்நிலைக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகிறது மற்றும் அதை மீறினால், அது மேலோட்டத்தில் வெகுஜன இயக்கத்திற்கு வழிவகுக்கும் என்று குழு விளக்குகிறது.

நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம் - கோழிகள் மூலம் உலகிற்கு தெரியவந்தது எப்படி?

துருக்கியில் அமைந்துள்ள கப்படோசியாவின் காதல் பள்ளத்தாக்கு வழியாக நான் நடந்தபோது வேகமாக வீசிய காற்றால் புழுதிப் பறந்தது.

இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மலைச்சரிவுகள் அந்த நிலப்பரப்பை ஆழமான சிவப்பு பள்ளத்தாக்குகளுடன் வண்ணமயமாக்கின.

மேலும், தூரத்தில் புகைக்கூடு போன்ற பாறை வடிவங்கள் தெரிந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கொந்தளிப்பான எரிமலைச் சூழல் இயற்கையாகவே இந்தக் கோபுரங்களை உருவாக்கியுள்ளது. மத்திய துருக்கியில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு சுற்றுப்பயணமும் அதனூடே வெப்பக்காற்று பலூன் சவாரியில் ஈடுபடவும் மில்லியன் கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

ஆனால், கப்படோசியாவின் இடிந்து விழும் மேற்பரப்பிற்கு கீழே, 20,000 மக்களின் வாழ்விட ரகசியத்தை மறைத்து வைத்திருக்கும் ஒரு நிலத்தடி நகரம் பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்தது.

இன்று டெரிங்குயு என அழைக்கப்படும் பழங்கால நகரமான எலெங்குபு, பூமியின் மேற்பரப்பிலிருந்து 85 மீட்டருக்கு மேலான ஆழத்தில் 18 நிலைகளில் குகைப்பாதைகளை சூழ்ந்திருந்தது. உலகிலேயே மிகப்பெரிய அளவில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இந்த நிலத்தடி நகரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. கிரேக்க-துருக்கியப் போரின்போது அடைந்த தோல்வியை அடுத்து, 1920களில் இந்த நகரம் கப்படோசியன் கிரேக்கர்களால் கைவிடப்பட்டது. அதன் குகை போன்ற அறைகள் நூற்றுக்கணக்கான மைல்கள் நீளத்தில் அமைந்திருப்பது மட்டுமல்லாமல், இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் தனித்தனி நிலத்தடி நகரங்களும் இந்தக் குகைப் பாதைகளுடன் இணைக்கப்பட்டு, பூமிக்கடியில் பெரிய வலையமைப்பை உருவாக்கிருக்கலாம் என தோன்றுகிறது.

எனது பயண வழிகாட்டியான சுலேமானின் கூற்றுப்படி, டெரிங்குயு 1963 ஆம் ஆண்டில் உள்ளூர்வாசி ஒருவரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தன்னுடைய வீட்டை புதுப்பித்தபோது, அவருடைய கோழிகள் தொடர்ந்து காணாமல் போயின. புதுப்பிக்க தோண்டப்பட்ட குழிக்குள் நுழையும் கோழிகள், பின்னர் காணாமல் போய்விடும். இது தொடர்ந்து நடைபெறவே, அந்த இடத்தை அவர் தோண்டியபோது ஓர் இருளடைந்த பாதையைக் கண்டுபிடித்தார்.

டெரிங்குயுவின் இந்த நிலத்தடி நகரத்திற்கு செல்லும் 600 நுழைவுவாயில்கள் தனியார் வீடுகளுக்குள் இருப்பதை கண்டுபிடிப்பதற்கு வழிகோலிய, முதல் முயற்சி இதுதான்.

உடனடியாக தொடங்கிய அகழ்வாராய்ச்சியில், நிலத்தடி குடியிருப்பு, உலர் உணவு சேமிப்பு, கால்நடை தொழுவங்கள், பள்ளிகள், வைன் ஆலைகள் மற்றும் ஒரு தேவாலயம் ஆகியவற்றின் சிக்கலான வலையமைப்பு வெளிப்பட்டது. ஒரு முழு நாகரிகமும் பாதுகாப்பாக நிலத்தடியில் அங்கு புதைந்திருந்தது. அதன் பிறகு, ஆயிரக்கணக்கான துருக்கிய சுற்றுலாப்பயணிகள் அந்த இடத்திற்கு வருகை தர ஆரம்பித்தனர். பின், 1985ஆம் ஆண்டு யுனஸ்கோவின் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் டெரிங்குயு இணைக்கப்பட்டது.

இந்த நகரம் எப்போது உருவானது என்பது பற்றி உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால், கி.பி. 370இல் எழுதப்பட்ட செனோபோனின் அனபாசிஸ் புத்தகத்தில் டெரிங்குயு பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்தப் புத்தகத்தில், கப்படோசியா பகுதியில் அல்லது அதற்கு அருகில் இருந்த அனடோலியன் மக்கள், அப்பகுதியில் நன்கு அறியப்பட்ட குன்று ஓர குகைக் குடியிருப்புகளைவிட, நிலத்தடியில் தோண்டப்பட்ட வீடுகளில் வசித்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மண்ணில் நீர் பற்றாக்குறை காரணமாக தனிசிறப்பான நிலத்தடி கட்டுமானம், இளகிய மற்றும் எளிதில் வடிவமைக்கும் தன்மை கொண்ட பாறைகள் இந்தப் பகுதியில் அமைந்திருப்பதால் கப்படோசியா இந்த வகையான நிலத்தடி கட்டுமானத்திற்கு மிகவும் பொருத்தமானது என்கிறார் புளோரிடா ஸ்டேட் பல்கலைக்கழக பழங்கால ஆய்வுகளின் இணைப் பேராசிரியரான ஆண்ட்ரியா டி ஜியோர்ஜி.

இந்தப்பகுதியின் நில அமைப்பு, தோண்டுவதற்கு உகந்தது என்றும் மண்வெட்டி மற்றும் பிகாக்ஸ் உதவியுடனே இந்தப் பாறைகளைத் தோண்ட முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், டெரிங்குயுவின் நிலத்தடி நகரத்தை யார் உருவாக்கினார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. நிலத்தடி குகைகளின் பரந்த வலையமைப்பிற்கான அடித்தளத்தை ஹிட்டியர்களது வரலாற்றில் பார்க்க முடிகிறது, "கிமு 1200இல் ஃபிரிஜியர்களின் தாக்குதலுக்கு ஆளானபோது அவர்கள் பாறையில் முதல் சில நிலைகளை தோண்டியிருக்கலாம்" என்கிறார் மத்தியதரைக் கடல் நிபுணர் ஏ பெர்டினி. குகை குடியிருப்புகள், பிராந்திய குகை கட்டடக்கலை பற்றிய அவரது கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் இந்தக் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில், ஹிட்டியர்களின் கலைப்பொருட்கள் டெரிங்குயுவின் உள்ளே காணப்பட்டன.

இருப்பினும், நகரத்தின் பெரும்பகுதி ஃபிரிஜியன்களால் கட்டப்பட்டிருக்கலாம். "பிரிஜியர்கள் அனடோலியாவின் மிக முக்கியமான ஆரம்பகால பேரரசுகளில் ஒன்று" என்கிறார் டி ஜியோர்ஜி.

பிரிஜியர்கள் கி.மு.வின் ஆயிரம் ஆண்டுகால இறுதியில் மேற்கு அனடோலியா முழுவதும் பரவியிருந்தனர். பாறை அமைப்புகளை நினைவுச் சின்னமாக்குதல் மற்றும் பாறை வெட்டு முகப்புகளை உருவாக்குவதற்கான திறமை அவர்களிடம் இருந்தது என்றும் டி ஜியோர்ஜி கூறுகிறார்.

டெரிங்குயு முதலில் பொருட்களை சேமிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான தற்காலிக புகலிடமாகவே அவை இருந்தன. கப்படோசியா பல நூற்றாண்டுகளாகப் பேரரசுகளின் தொடர் படையெடுப்பை எதிர்கொண்டது.

7ஆம் நூற்றாண்டு இஸ்லாமியத் தாக்குதல்களின் போது இந்தக் குடியிருப்புகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன. ஃபிரிஜியன்கள், பெர்சியர்கள், செல்ஜுக்குகள் மற்றும் பலர் இப்பகுதியில் வசித்து வந்தனர். அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் நிலத்தடி நகரம் விரிவடைந்தது. பைசண்டைன் சகாப்தத்தில் டெரிங்குயுவின் மக்கள் தொகை அதன் உச்சத்தை எட்டி, கிட்டத்தட்ட 20,000 குடியிருப்பாளர்கள் நிலத்தடியில் வாழ்ந்தனர்.

இன்று, வெறும் 60 துருக்கிய லிராவுக்கு நிலத்தடி வாழ்க்கையின் கொடூரமான யதார்த்தத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். கருகிப்போன கறை படிந்த சுவர்கள் கொண்ட அந்தக் குகைக்குள் நான் இறங்கியதும், எனக்குள் அச்சம் ஏற்பட்டது. இருப்பினும், டெரின்குயு மீது படையெடுத்த பல்வேறு பேரரசுகளின் புத்திக் கூர்மை வெளிப்படையாகத் தெரிந்தது. படையெடுப்பாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே குறுகலாக உருவாக்கப்பட்டிருந்த நடைபாதைகளால் பார்வையாளர்கள் குனிந்து செல்ல வேண்டியிருந்தது.

அரை டன் வட்ட வடிவ கற்பாறைகள் ஒவ்வொரு 18 நிலைகளுக்கும் இடையில் கதவுகளைத் தடுத்து, உள்ளே இருந்து மட்டுமே நகரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தன. கதவுகளின் மையத்தில் படையெடுப்பாளர்களைக் குறிவைத்து ஈட்டி எறிவதற்கான சிறிய துளைகள் இருந்தன.

"நிலத்தடி வாழ்க்கை ஒருவேளை மிகவும் கடினமாக இருந்திருக்கலாம்" என்கிறார் என் பயண வழிகாட்டி சுலேமான்.

இங்கு வசித்தவர்கள் சீல் செய்யப்பட்ட களிமண் ஜாடிகளில் தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, டார்ச்லைட் மூலம் வாழ்ந்தனர். இறந்த உடல்களை ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அப்புறப்படுத்தினர் என்றும் அவர் கூறினார்.

இந்த நகரத்தின் ஒவ்வொரு மட்டமும் குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளில் இருந்து வெளிப்படும் வாசனை மற்றும் நச்சு வாயுக்களைக் குறைக்க மேற்பரப்புக்கு அருகிலேயே அவற்றுக்கான தொழுவம் அமைக்கப்பட்டுள்ளது.

நகரின் உள்அடுக்குகளில் குடியிருப்புகள், பாதாள அறைகள், பள்ளிகள் மற்றும் சந்திப்பு இடங்கள் இருந்தன. இரண்டாவது மாடியில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய பைசண்டைன் மிஷனரி பள்ளி, அதன் தனித்துவமான பீப்பாய்-வால்ட் கூரைகளால் அடையாளம் காணக்கூடியது. ஓயின் தயாரித்ததற்கான ஆதாரங்கள் பாதாள அறைகளில் இருந்தன. இந்தச் சிறப்பு அறைகள், டெரிங்குயுவில் வசிப்பவர்கள் மேற்பரப்பிற்கு அடியில் பல மாதங்கள் செலவழிக்கத் தயாராக இருந்ததைக் காட்டுகிறது.

இங்கு அமைந்துள்ள ஒரு சிக்கலான காற்றோட்ட அமைப்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட கிணறு கவனம் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. இது முழு நகரத்திற்கும் சுத்தமான காற்று மற்றும் சுத்தமான தண்ணீரை வழங்கியிருக்கும். உண்மையில், டெரிங்குயுவின் ஆரம்பக்கால கட்டுமானம் இந்த இரு அத்தியாவசிய கூறுகளை மையமாகக் கொண்டது எனக் கருதப்படுகிறது. அந்தக் கிணறு கீழே இருந்து எளிதாக துண்டிக்க கூடிய வகையில் 55 மீட்டருக்கும் கீழே தோண்டப்பட்டிருந்தது.

டெரிங்குயுவின் கட்டுமானம் உண்மையில் புத்திசாலித்தனமாக இருந்தபோதிலும், இது கப்படோசியாவில் உள்ள ஒரே நிலத்தடி நகரம் அல்ல. 445 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரம், அனடோலியன் சமவெளிக்கு அடியில் அமைந்துள்ள 200 நிலத்தடி நகரங்களில் பெரியது மட்டுமே. 40க்கும் மேற்பட்ட சிறிய நகரங்கள் இதைவிட மூன்று மடங்கு ஆழமான நிலத்தடியில் அமைந்துள்ளன. அவற்றில் சில டெரிங்குயுவுடன் குகை வழிப்பாதை மூலமாக இணைந்துள்ளன.

மேற்பரப்புக்கு உடனடியாகத் திரும்புவதற்கான அவசரகால தப்பிக்கும் வழிகள் இந்த நகரங்கள் அனைத்திலும் உருவாக்கப்பட்டுள்ளன. கப்படோசியாவின் நிலத்தடி ரகசியங்கள் இன்னும் முழுமையாகத் தோண்டப்படவில்லை. 2014ஆம் ஆண்டில், நெவ்செஹிர் பகுதிக்கு அடியில் ஒரு புதிய பெரிய நிலத்தடி நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெரிங்குயுவின் வரலாறு, 1923இல் கப்படோசியன் கிரேக்கர்கள் வெளியேறியபோது முடிவுக்கு வந்தது. நகரம் உருவாக்கப்பட்டு 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு, டெரிங்குயு கடைசியாக கைவிடப்பட்டது. டெரிங்குயு அதே இடத்தில் இருந்தாலும், சில கோழிகள் இந்த நிலத்தடி நகரத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வரை அதன் இருப்பு நவீன உலகத்திற்கு மறந்துவிட்டது.

Monday, September 26, 2022

சஞ்சீவி மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ள சஞ்சீவி மலை, பல்வேறு புராணக் கதைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சஞ்சீவி மலையில் அமைந்துள்ள பாறை ஓவியங்கள் குறித்து இயற்கை ஆர்வலர்களான வெங்கடேஷ், பிரகாஷ்குமார் ஆகியோர் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான முனைவர் போ.கந்தசாமி தலைமையில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது.


இதுகுறித்து பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது, 'ராஜபாளையம் நகரின் பிரதானமாக அமைந்துள்ள சஞ்சீவி மலை, பல மூலிகைகள் நிறைந்த பகுதியாக, புராண காலத்தோடு இணைத்து பெருமையுடன் கூறப்பட்டு வருகிறது. மலை உச்சியில் சஞ்சீவிநாதர் மற்றும் முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

ஆரம்ப காலத்தில் மழை பெய்ய ஊர் மக்கள் ஒன்று கூடி சஞ்சீவி மலைக்குச் சென்று கடவுளைக் வேண்டிக்கொண்டு மேளதாளத்துடன் ஆரவாரமாய் பூஜை செய்து ஒரு கல்லை கீழே உருட்டி விடுவார்கள். பலமுறை அன்று இரவே மழை பெய்ததாகவும் கதைகள் கூறுகின்றன.



சஞ்சீவி மலையில் தேன் தட்டுப்பாறையின் அடிவாரத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் வெண்சாந்து கொண்டு வரையப்பட்டுள்ளன. பாறை ஓவியத்தில் ஆயுதங்களோடு மனிதன் நிற்பது போன்றும், காட்டெருமை மீது ஒரு மனிதன் அமர்ந்திருப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மூன்று பேருக்கு மேல் குழுவாக நடனமாடுவது போன்றும் வரையப்பட்டுள்ளது.

மேடையின் மீது அமர்ந்த ஒருவருக்கு நீண்ட உயரமான குடை போன்ற அமைப்புடன் வரையப்பட்டுள்ளது. படங்கள் தெளிவில்லாமல் முழுமை அடையாததால் ஆரம்ப காலத்தில் வரையப்பட்டதாகத் தெரிகிறது. விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள் கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன.



இந்த பாறை ஓவியங்களில் விலங்குகள் அதிகமாக வரையப்பட்டுள்ளது. அத்துடன் மனிதனின் சண்டை காட்சிகள் குறைவாக வரையப்பட்டுள்ளன. விலங்குகள் அதிகமாக வரையப்பட்டுள்ளதால் இவை தொடக்க காலத்தை குறிப்பதாக இருக்கிறது. மனிதனின் சண்டைக் காட்சிகள் அடுத்தடுத்த காலகட்டங்களில் வரையப்பட்டிருக்க வேண்டும். பல காலகட்டங்களாக இப்பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இவற்றில் முக்கோண அமைப்புகள், குறியீடுகள் மற்றும் பல சின்னங்கள் காணப்படுகின்றன. இவற்றிலுள்ள குறியீட்டு உருவங்களை முழுமையாக கணிக்க இயலவில்லை. நீண்ட நெடிய பாறை முழுவதும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பல இடங்களில் அழிந்து காணப்படுகிறது. எனவே இந்த வெண்சாந்து பாறை ஓவிய அமைப்பை உற்றுநோக்கும்போது காலத்தால் சற்று முற்பட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் பல இடங்களில் வெண்சாந்து ஓவியங்கள் பெருங்கற்காலத்தில் வரையப்பட்டுள்ளன. எனவே இப்பாறை ஓவியங்கள் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது.



ஆரம்ப காலகட்டங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் வரைந்து அதற்கு மேல் வெண்சாந்து ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இப்பாறை ஓவியங்கள் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன் ஓவிய எழுத்துக்களாக வரையப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல இடங்களில் அமைந்துள்ள பாறை ஓவியங்கள் பெரும்பாலும் வழிபாட்டுத் தலங்களாக இருந்து வருகிறது. ஏனெனில் வரையப்பட்டுள்ள மனிதர்களை, மூதாதையர் வழிபாடாக மக்கள் இன்றளவும் பல்வேறு மலைகளில் வணங்கி வருகின்றனர்.



சஞ்சீவி மலை பாறை ஓவியங்கள் கற்கால பண்பாட்டோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது. முருகன் கோவில் அருகே உள்ள பாறையில் அலங்காரத்துடன் விஷ்ணுவின் முழு கோட்டுருவம் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே பாறை ஒன்றில் சூரிய வட்டம் ஒன்று பெண் உருவில் செதுக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலையில் அமைந்துள்ள இப்பாறை ஓவியத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து ஓவியத்தை பாதுகாக்க முன்வர வேண்டும். பரந்துபட்ட இம்மலையில் மேலும் பல தொல்லியல் தடயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது' என்று தெரிவித்தார்.

Saturday, September 24, 2022

பெண் குழந்தைகளின் பெற்றோரே.. தமிழகத்தில் அக்டோபர் 11 வரை.. மிஸ் பண்ணிடாதீங்க..!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திருவிழா அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் பத்து வயது உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒரு நிதியாண்டில் 250 ரூபாய் முதல் 1.50 லட்சம் வரை கணக்கில் செலுத்தலாம்.

இதற்கு தற்போதைய வட்டி 7 .6 சதவீதமாகும். சேமிப்பு கணக்கு 21 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும்.

குழந்தை பத்தாம் வகுப்பு முடித்ததும் அல்லது 18 வயது அடைந்ததும் மேற்படிப்புக்காக 50 சதவீதம் தொகை, திருமணத்தின் போது முழு தொகையும் பெறலாம்.எனவே பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Wednesday, September 21, 2022

ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி கொள்ளலாம் - ராதாகிருஷ்ணன் விளக்கம்

நியாயவிலைக்கடைகளில் ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி வைத்து கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில், தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அங்கு ரேசன் பொருள் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர், ரேசன் பொருட்கள் தேவையில்லை என்றால் அவர்களுக்கு கெளரவ அட்டை என்கிற முறை உள்ளது என்றார். இதனை தமிழ்நாட்டில் 60 ஆயிரம் பேர் பயன்படுத்துகின்றனர் என்றார்.

கௌரவ அட்டை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்து ரேசன் பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 75 ரேசன் கடைகளை புதுப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய ரேசன் கடை கட்டும் போது அதில் கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், முதியோர் அமரும் வசதிகளோடு கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.அதுமட்டுமல்லாமல், கூட்டுறவுத்துறையில் 3,997 காலிப்பணியிடங்கள் இருக்கிறது, அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

இந்தாண்டு மே 24-ம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் ஹெக்டர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த பகுதியில் தற்போது 40 நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை என்பதால் இன்று 10 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது என்றார்.

தமிழ்நாட்டில் தற்போது பதிமூன்றரை லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்க குடோன் உள்ளது. மேலும் 20 இடங்களில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் பாதுகாப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது என்றார். மேலும், ரேசன் கடையில் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் இருக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Sunday, July 24, 2022

குரூப் 4 தேர்வு ஈஸியா இருந்துச்சு... தேர்வர்கள் மகிழ்ச்சி

தமிழ் நாடு அரசுத் துறைகளில் உள்ள 7,301 காலி இடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வு இன்று நடைபெற்றது.
இதற்காக மாநிலம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கியது.

அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான டி.என்.பி.எஸ்.சி. வாயிலாக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் இன்று (ஜூலை 24) குரூப் - 4' தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத 12 லட்சத்து 67 ஆயிரம் பெண்கள், 131 மூன்றாம் பாலினத்தவர் உள்பட, 22 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில், 503 மையங்களில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.

தேர்வில், 10ம் வகுப்பு தரத்தில் 300 மதிப்பெண்களுக்கு வினா தொகுப்பு புத்தகம் வழங்கப்படும். கட்டாய தமிழ் மொழி தகுதி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெறும். பொதுப் படிப்பு, திறனறிதல் ஆகியவற்றில் 100 கேள்விகள் இடம் பெறும். அனைத்திலும் சேர்த்து குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, தேர்ச்சி பட்டியலில் தேர்வர்கள் இடம் பெறுவர்.

பொதுத் தமிழ் பிரிவில் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்களை எடுத்திருந்தால் மட்டுமே, அடுத்த பிரிவில் இடம் பெற்றுள்ள விடைகள், மதிப்பீடு செய்யப்படும்.

இந்நிலையில், காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை குரூப் 4 தோவு நடைபெற்றது. தேர்வு எழுதி முடித்து வந்த தேர்வர்கள் கூறும்போது, தாள் 1 தமிழ் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தது. பொது அறிவு வினாக்களும் எளிதாக இருந்தது.

வேதியில் வினாக்களில் பார்முலாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அரசியல் அறிவியல், பொருளாதாரத்திலும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.

200 வினாக்களுக்கு சராசரியாக 160 முதல் 170 வினாக்கள் சரியாக விடை அளித்திருந்தால், வாய்ப்பு எதிர்பார்க்கலாம் என தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.