Monday, October 3, 2022

சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் எப்போது? விரிவான வழிபாட்டு விளக்கங்கள்!

நாளை சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் 9-ம் நாளான இந்தப் புண்ணிய தினத்தில் அம்பாளை எப்படி வழிபட வேண்டும், இன்று சரஸ்வதி தேவிக்கு என்ன சிறப்பு, சரஸ்வதி பூஜை செய்வது எப்படி, பூஜையில் ஏடு அடுக்கும் - பிரிக்கும் நேரம் என்னென்ன, சரஸ்வதி பூஜா பலன்கள் குறித்து புராணங்கள் என்ன சொல்கின்றன...
விரிவாகத் தெரிந்துகொள்வோமா?

பவிஷ்ய புராணம் சொல்லும் ரகசியம்!

`அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பார் ஒளவை. தைத்திரீய உபநிஷதமும் 'மாதாவை தெய்வமாகக் கொள்வாயாக; பிதாவை தெய்வ மாகக் கொள்வாயாக' என்றே அறிவுறுத்தும். இங்கேயும் முதலில் அம்மாதான்.

இப்படித் தாயாரை தெய்வமாக நினைக்க முடியுமானால் தெய்வத்தைத் தாயாராக நினைக்கமுடியும் அல்லவா? அங்ஙனம் ஆதிசக்தியை நம் அம்மாவாகக் கருதி வழிபடும் நாள்களே நவராத்திரி தினங்கள். இந்த ஒன்பது தினங்களும் அம்பிகையைப் பக்தியோடு வழிபடும் அன்பர்களுக்குத் தேவர்களுக்குக் கிட்டாத இன்பமும், செல்வபோகமும், பிணி இல்லாத வாழ்க்கையும் வரமாகக் கிடைக்கும்.
சரஸ்வதி அம்மன்

9 நாள்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி மூன்று நாள்களில் வழிபட வேண்டும். அதுவும் இயலாதவர்கள் நவமி தினத்தில் மட்டும் அம்பாளை வழிபட்டு பலன் அடையலாம். இதனால் துன்பமே இல்லாத வாழ்க்கை அமையும் என்கிறது பவிஷ்ய புராணம்.

நவமித் திருநாளில் என்ன செய்ய வேண்டும்?

நவராத்திரியில் 9-ம் நாளான நவமி அன்று சும்ப- நிசும்பர்களை வதம் செய்யத் தோன்றிய காமேஸ்வரி எனும் சிவசக்தி கோலத்தில் அம்பாளை வழிபடுவார்கள். இந்தத் தினத்தில் 10 வயதுள்ள பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டுமாம். இதன் மூலம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இந்தத் தினத்தில் அம்பாள் திருவுருவப் படத்துக்கு அடுக்கு மல்லி, நந்தியாவட்டை மலர்களைச் சமர்ப்பித்து வழிபடலாம். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம்.

மட்டுமன்றி ஒன்பதாம் நாளான இந்த நவமி தினத்தையே சரஸ்வதி பூஜையாகவும் கொண்டாடுகிறோம்.
சரஸ்வதி தேவி

சரஸ்வதி பூஜை ஏன், வழிபடுவது எப்படி?

ஆதிசக்தியின் அம்சம் மகா சரஸ்வதியாகத் தோன்றி அருள்பாலித்த புண்ணிய தினம் என்பதால், நவராத்திரி நவமி (மூல நட்சத்திரம் இணைந்த) நாள் கலைவாணிக்கு உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.

இந்த நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜையறையைக் கழுவிக் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். உரிய சுபவேளையில் சரஸ்வதி தேவியை புத்தகம், படம், விக்ரகம் அல்லது கலசத்தில் ஆவாஹனம் செய்யலாம்.

பிள்ளைகளின் பாடப்புத்தகங்களை அடுக்கி, பட்டாடை போர்த்தி அதன்மீது கலைவாணியின் விக்கிரகம், படம், கலசம் வைத்து வழிபடலாம். முறைப்படி பிரார்த்தனை சங்கல்பம் செய்து வணங்குதல் வேண்டும்.

படமோ, விக்கிரஹமோ, கலச ஸ்தாபிதமோ மலர்களால் அலங்கரித்து, சந்தனக் குங்குமத் திலகம் இட்டு அலங்கரிக்க வேண்டும். கனி வகை களையும், சுண்டல், பொங்கல் பிரசாதங்களையும் நைவேத்தியமாகச் சமர்ப்பிக்கலாம்.

சரஸ்வதி தேவி மகிமைகள்

நங்காய் நங்காய் நமோஸ்து

ஞானக் கொழுந்தே நமோஸ்து

கல்விக்கரசி நமோஸ்து!

கணக்கறி தேவி நமோஸ்து!

சொல்லும் பொருளே நமோஸ்து!

சூட்சுமரூபி நமோஸ்து!

- என்று போற்றித் துதி செய்து மலர்களால் அர்ச்சித்தும், சரஸ்வதி கலம்பகம் முதலான துதிப்பாடல்களைப் பாடியும் குடும்பத்துடன் சேர்ந்து வணங்கவேண்டும். பின்னர் தூப-தீப ஆராதனைகள் செய்து வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட் களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல் அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.
சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை உகந்த நேரம்நாளை (புரட்டாசி - 17) 4.10.22 செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் 9 மணி வரையிலும் சுக்ர ஓரை காலம் உகந்தது.மாலையில் பூஜிக்க வேண்டும் எனில், மாலை 7 முதல் 8 மணிக்குள் குரு ஓரையில் ஏடு அடுக்கி வழிபடலாம்.

விஜயதசமி பூஜை:

5.10.22 அன்று (புரட்டாசி -18) புதன் கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் பூஜை செய்து ஏடு பிரிக்கலாம். புதன் கிழமை தசமித் திருநாளில் புரட்டாசி திருவோணமும் சேர்ந்து வருவதால் ஹயக்ரீவருக்கும் உகந்த நாள் இது. ஆகவே இந்த வருடம் தசமியில் விநாயகர், சரஸ்வதி தேவி, ஹயக்ரீவர் ஆகிய மூவரையும் வழிபட்டு அருள்பெறலாம்.

என்ன பலன் கிடைக்கும்?

வித்யாதி தேவதை, கலை மடந்தை, அறிவு தெய்வம் என்று சரஸ்வதிக்கு உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம். எல்லாவிதமான இகபர நலன்களும் வழங்கும் அம்பிகை விசேஷமாக வாக்குவன்மையும் அருள்கிறாள். ஏனெனில் அவளே அக்ஷர ரூபமானவள்.இன்று அந்த அன்னையை வழிபடுவதால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம். பிள்ளைகள் பிடித்தமான கல்வித் துறைகளில் பெரும் வெற்றியோடு ஜொலிக்க முடியும். மட்டுமன்றி தனம், தானியம், நிலை யான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சுவர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக் கூடிய வழிபாடு இது!

No comments:

Post a Comment