Tuesday, October 4, 2022

"ஓசி" பஸ் டிராமாவுக்கு "ஃபுல்ஸ்டாப்".. இலவசம் பிடிக்கலயா? "பணம்" வாங்குங்க -நடத்துனர்களுக்கு அட்வைஸ்

இலவச பேருந்தில் கட்டணம் செலுத்தி பயணிக்க விரும்பும் பெண்களிடம் பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நடத்துனர்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

அதில், "உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்." என்றார்.

ஓசி டிக்கெட் வேண்டாம்

இதனிடையே கடந்த சில நாட்கள் முன்பாக கோவை அரசு பேருந்து ஒன்றில் நடத்துனரிடம் மூதாட்டி ஒருவர் கட்டணம் கொடுத்து டிக்கெட் கேட்டார். அதற்கு நடத்துனரோ , இது இலவச பேருந்துதான் கட்டணம் வேண்டாம் என்று கூற, "தமிழ்நாடே ஓசியில போகட்டும், நான் ஓசியில் போக மாட்டேன். எனக்கு கட்டணம் பெற்று டிக்கெட் கொடுங்கள் என்று கூறியது பரபரப்பை கிளப்பியது.

டிராமா

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்ட நிலையில், திமுக செய்தித்தொடர்பாளர் ராஜீவ் காந்தி "கோவை அதிமுக IT WING -ஐ சார்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தன் பக்கத்து வீட்டு துளசியம்மாள் என்கிற அதிமுகவை சேர்ந்த மூதாட்டியை அழைத்து கொண்டு போய் TN 38 N 2841 எண் பேருந்தில் நடத்துனருடன் நான் ஓசியில் போக மாட்டேன் என பிரச்சனை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பி இருக்கிறார்!" என்று பதிவிட்டார்,

வழக்குப்பதிவு

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்த வீடியோவை வெளியிட்டது அதிமுகவை சேர்ந்த பிருத்விராஜ்தான் என்பது உறுதியானது. இதனை அடுத்து மதுக்கரை போலீசார் பிருத்விராஜ் உள்ளிட்ட 3 பேர் மீது அவதூறு பதிவு செய்தது. இதற்கு அதிமுகவின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

வாய்மொழி அறிவுறுத்தல்

இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுபோன்றவற்றை தடுக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவை நடத்துனர்களுக்கு வழங்கி இருக்கிறது. அதன்படி, இலவச பேருந்து பயணத்தை விரும்பாத பெண்களிடம் கட்டணம் பெற்று டிக்கெட் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment