தமிழ் நாடு அரசுத் துறைகளில் உள்ள 7,301 காலி இடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வு இன்று நடைபெற்றது.
இதற்காக மாநிலம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கியது.
அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான டி.என்.பி.எஸ்.சி. வாயிலாக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் இன்று (ஜூலை 24) குரூப் - 4' தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத 12 லட்சத்து 67 ஆயிரம் பெண்கள், 131 மூன்றாம் பாலினத்தவர் உள்பட, 22 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில், 503 மையங்களில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
தேர்வில், 10ம் வகுப்பு தரத்தில் 300 மதிப்பெண்களுக்கு வினா தொகுப்பு புத்தகம் வழங்கப்படும். கட்டாய தமிழ் மொழி தகுதி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெறும். பொதுப் படிப்பு, திறனறிதல் ஆகியவற்றில் 100 கேள்விகள் இடம் பெறும். அனைத்திலும் சேர்த்து குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, தேர்ச்சி பட்டியலில் தேர்வர்கள் இடம் பெறுவர்.
பொதுத் தமிழ் பிரிவில் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்களை எடுத்திருந்தால் மட்டுமே, அடுத்த பிரிவில் இடம் பெற்றுள்ள விடைகள், மதிப்பீடு செய்யப்படும்.
இந்நிலையில், காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை குரூப் 4 தோவு நடைபெற்றது. தேர்வு எழுதி முடித்து வந்த தேர்வர்கள் கூறும்போது, தாள் 1 தமிழ் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தது. பொது அறிவு வினாக்களும் எளிதாக இருந்தது.
வேதியில் வினாக்களில் பார்முலாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அரசியல் அறிவியல், பொருளாதாரத்திலும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.
200 வினாக்களுக்கு சராசரியாக 160 முதல் 170 வினாக்கள் சரியாக விடை அளித்திருந்தால், வாய்ப்பு எதிர்பார்க்கலாம் என தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment