இந்திய தொழில் வர்த்தக சபை (ஐசிசிஐ) கோவை கிளை தலைவர் ராமலு தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய ரஷ்யா நாட்டின் தென்னிந்தியாவுக்கான தலைமை தூதரக அதிகாரி ஒலெக் அவ்தீவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நட்புறவு சிறப்பாக உள்ளது. இருநாடுகள் இணைந்து தயாரித்துள்ள 'பிரமோஸ்' அதிவேக ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி உள்ளிட்ட பல வழி முறைகளில் ஏவப்படக்கூடிய தன்மை கொண்டது. பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேளாண், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
ரஷ்யாவில் அதிக திறமை வாய்ந்த வல்லுநர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள திறன்மிக்க மனிதவளம் முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்துறையில் அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதை கருத்தில் கொண்டு, இந்தியாவில் இருந்து ரஷ்ய நாட்டுக்கு பணியாற்ற செல்ல விரும்பும் பல்துறை வல்லுநர்களுக்கு விசா வழங்குவதில் தொடங்கி தேவையான உதவிகள் தூதரகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
எண்ணெய் நிறுவனங்கள், எல்பிஜி, பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக வாய்ப்பு சிறப்பாக உள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்த கமிஷனின் பரிந்துரைப்படி ரஷ்யா 500 பொருட்களை இந்தியாவிடம் இருந்து வாங்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையினர் சரியான முறையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தொழில்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்திய தொழில் வர்த்தக சபை கோவை துணைத் தலைவர் சுந்தரம், செயலாளர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment